Tamil Museum London Tamil Museum London
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • மெய்நிகர் காட்சியகம்
    • தமிழின் தொன்மை
      • வைகை ஆற்றங்கரை  நாகரீகம்
      • தமிழ் மொழி மீட்பில் ஐரோப்பியரின் பங்கு
    • தமிழும் ஈழமும்
      • ஈழத்தில் எழுத்து மரபு
      • ஈழத்தில் வணிக மரபு
      • வன்னி நிலப்பரப்பின் தொல்லியல் சான்றுகள்
      • கந்தரோடை நாகரிகம்
      • முள்ளிவாய்க்கால்
    • தமிழ் மரபும் பண்பாட்டு கூறுகளும்
    • தமிழும் நாவலந்தீவும்
  • கட்டுரைகள்
    • செந் தமிழ் அந்தணர், முது முனைவர் இரா.இளங்குமரனார்
    • தொல்காப்பியம் போற்றுமின்
  • தமிழ்ச்சாரல்
    • இதழ்-3
    • இதழ் -4
    • இதழ்- 7
  • நிகழ்ச்சிகள்
    • தமிழர்களிடையே “ஆசீவகம்”
    • தமிழ் பேசும் மக்களின் தோற்றம்
    • இலங்கை தமிழரின் அரச உருவாக்கத்தை அடையாளப்படுத்தும் பண்டையகால நாணயங்கள்
    • நாட்டுப்புற இலக்கியங்களே செவ்வியல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்
  • காணொளிகள்
    • இலங்கை தமிழரின் அரச உருவாக்கத்தை அடையாளப்படுத்தும் பண்டையகால நாணயங்கள்
    • இலங்கையில் தமிழ் பௌத்தம்
    • தமிழ் மொழி பேசும் மக்களின் தோற்றம் -1
    • தமிழ் மொழி பேசும் மக்களின் தோற்றம்-2
    • தமிழ் மொழி பேசும் மக்களின் தோற்றம்-3
  • தமிழ்ச் சொற்கள்
Membership
Tamil Museum London

செந் தமிழ் அந்தணர், முது முனைவர் இரா.இளங்குமரனார்

By tamilmuseumlondon inகட்டுரைகள்

நாம் வாழுங் காலத்தின் மாபெரும் தமிழறிஞர், செந்தமிழ் அந்தணர் , முதுமுனைவர் இரா.இளங்குமரனார் யூலை 25ம் திகதியன்று(25-07-2021) மறைந்து விட்டார். மதுரை வாழவந்தாள்புரம் எனும் ஊரில் 1930ம் ஆண்டு (30-01-1930) பிறந்தார். இளம் வயதிலேயே தமிழ் மீதுள்ள பற்றால் தனது வடமொழிப் பெயரான `கிருஸ்ணன்` என்பதனைத் தூய தமிழ்ப் பெயராக இளங்குமரனார் என மாற்றிக் கொண்டார். தனது பதின்ம வயதுகளின் இறுதியிலேயே தமிழாசிரியராகவும் புலவராகவும்  தமிழ்ப் பணியினைத் தொடங்கிய ஐயா, தனது இறுதி மூச்சு வரை இப் பணியினை நிறுத்தவில்லை.  முழுமையான படிகள் (Copies )இல்லாமல் முழுமையடையாதிருந்த, தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற `குண்டலகேசி` நூலினைப் பல படிகளைத் திரட்டி முழுமையான ஒரு நூலாக 1958 இல் அரங்கேற்றினார்.  அழிந்து போன நூலாகக் கருதப்பட்ட `காக்கைப்பாடினியம்` என்ற பழந் தமிழர் நூலினை, அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தொகுத்த நூற்பாக்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றினை நிரல்படுத்தி ஒரு நூலாகக் கிடைக்கச் செய்தார். அதே போன்று அவரது காலத்தில் தமிழ் நாட்டில் கிடைக்காதிருந்த தொல்காப்பிய பொருளதிகாரத்தினைத் தேடி ஈழத்திலுள்ள சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் வரைத் தனது சொந்தச் செலவில் வந்து, அந்த நூலைப் பெற்றுத் தமிழ்நாடு கொண்டு போய்ச் சேர்த்துப் பரவலாக்கினார்.

   இதனை விடப் பல பொத்தகங்களையும் எழுதியுள்ளார். அவற்றில் சில வருமாறு.

இலக்கண வரலாறு

எங்கும் பொழியும் இன்பத் தமிழ்

தமிழிசை இயக்கம்

தனித்தமிழ் இயக்கம்

திருக்குறள் தமிழ் மரபுரை                               

தேவநேயம்

பாவாணர் வரலாறு

நாலடியார் தெளிவுரை

யாப்பருங்கலம்                

புறத்திரட்டு

செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்

உவமை வழி. அறநெறி விளக்கம்.

   இவ்வாறு ஐயா எழுதிய நூல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் எழுதிய நூல்களை நூற்றுக் கணக்கிலேயே எண்ணலாம். அந்தளவுக்கு எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார். திருத்துதல், அடித்தல், பிழை விடுதல் ஆகிய எதுவுமின்றி எழுதியதை நேரே அச்சுக்கு அனுப்பவல்ல  மொழியாளுமையுடையவர். மன ஒருமைப்படுத்தலுடனும், மனத் தெளிவுடனும் எழுதினால் பிறராலும் அவ்வாறு எழுத முடியும் எனக் கூறி வந்தவர். இந்த வகையில் தனது தொண்ணூறாவது வயதிலும் ஐம்பது நூல்களை எழுதி முடித்தவர்.

    தான் சொந்தமாக எழுதிய நூல்களை விட;  பாவாணர், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்களின் ஆய்வு நூல்களை தொகுக்கும் பணியையும் செய்தார். அத்துடன் எளிய நடையில்  புறநானூறு தொகுப்பு ஒன்றினையும் எழுதி வெளியிட்டார். இதனை விட அவர் ஏற்படுத்திய தவச்சாலையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் நூல்களைப் பேணியும் வந்துள்ளார்.

       ஐயாவின் எழுத்தாற்றல் போன்றே அவரின் பேச்சாற்றலும் வியப்புக்குரியது.  கேட்போரைக் கவரக் கூடிய வகையில் கணீர் குரலில் தெளிவான மொழி நடையில் எதுவித குறிப்புகளுமின்றியே பல மணி நேரம் பேசக் கூடியவர். எழுத்திலும்  சரி, பேச்சிலும் சரி , பிற மொழிச் சொற்களைக் கலக்காது தனித் தமிழினைப் பயன்படுத்தக் கூடிய வல்லமையுடையவர். ஐயாவின் பேச்சால் கவரப்பட்டு, கிரந்தம் நீக்கிய தமிழ்ப் பயன்பாட்டிலீடுபடும் நூற்றுக் கணக்கான பற்றாளர்களில் இக் கட்டுரையாளரும் ஒருவராவார். தனது பேச்சினூடாகப் பல அரிய செய்திகளையும் தகுந்த சான்றுகளுடன் சொல்லிச் சென்று விடுவார். காட்டாக, அமிழ்து- தமிழ்த் தொடர்பு (அமிழ்து, அமிழ்து என விடாமல் மீண்டும் மீண்டும் விரைவாகச் சொல்லும் போது, தமிழ் தமிழ் என ஒலித்தல்), தமிழ் மண்டலங்களாக சேர-சோழ- பாண்டிய மண்டலங்களுடன் ஈழ மண்டலத்தினையும் சேர்த்தல், பாரி மகளிருக்கு மணம் முடித்துக் கொடுத்தது கபிலரே; என்பன போன்ற பல அரிய செய்திகளை ஐயா பேச்சினூடாக இயல்பாகச் சொல்லிச் சென்று விடுவார். ஐயா தனது பேச்சினிடையே இடைக்கிடை தமிழ் மீது கொண்டுள்ள காதலால் உடைந்து அழுதுவிடுவதனையும் காணலாம்.

   இளங்குமரனார் ஐயா அவர்கள் எழுத்து, பேச்சு என்பவற்றினை விடத் தமிழ்த் தொண்டுக்காகக் களத்தில் இறங்கியும் செயற்பட்டவர். குறிப்பாகத் திருக்குறளினை அடிப்படையாகக் கொண்டு தமிழர் வாழ்வியலினைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கனவு கண்டவர். குறிப்பாகக் குறள் ஓதித் தமிழ் முறைப்படி, எதுவித வடமொழி மந்திரங்களுமின்றித் திருமணங்களை நடாத்தி வைத்தவர். இதுவரை இவ்வாறு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.  அதே போன்று மது (கள்) இல்லாத தமிழர் வாழ்வியலுக்காகவும் ஓயாது பரப்புரை செய்து வந்தவர். அதே போன்று தவச்சாலை ஒன்றினை ஏற்படுத்தி, அங்கு வள்ளுவர் சிலையினை நிறுவி, பல்லாயிரக் கணக்கான தமிழ் நூல்களையும் வைத்துத் தமிழ்த் தொண்டாற்றியவர். ஐயா தமிழுக்காக உணவு மறுப்புப் போராட்டம் போன்ற அற வழிப் போராட்டங்களிலும் அவ்வப்போது ஈடுபட்டும் வந்திருந்தார்.

  ஐயாவின் தமிழ்த் தொண்டுகளுக்காகப் பல வெற்றியாரங்களையும் (விருதுகளையும்), பரிசுகளையும் பல தலைவர்களிடமிருந்து வாங்கிக் குவித்தவர். அவ்வாறு வெற்றியாரங்கள் மூலமும் பரிசுகளாகவும் பெறப்பட்ட பெருந் தொகைப் பணத்தினை மீண்டும் தமிழ்த் தொண்டுக்கே செலவிட்ட ஒரு மாமனிதராகவே ஐயா விளங்குகின்றார். தனது சம்பளம், மனைவியின் அணிகலன்களை விற்று வந்த பணம் என்பவற்றினையும் தமிழ் வளர்ச்சிக்காகவே செலவிட்டு; ஒரு துறவி போலவே வாழ்ந்து வந்தவர். ஐயாவின் தமிழ்ப் பணிகளைக் கருவாகக் கொண்டு `‘உலகப் பெருந்தமிழர் – தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் – வாழ்வும் பணியும்‘ என்ற தலைப்பில் ஒரு ஆவணப் படமானது  பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளி வந்திருந்தது.

     மேற் கூறிய காரணங்களாலேயே நாம் வாழுங் காலத்தின் மிகப் பெரும் தமிழறிஞர், பெரும் தொண்டர் என இரா.இளங்குமரனாரை அடையாளப்படுத்துகின்றேன். ஐயாவின் பணிகளைக் கருத்திற் கொண்டு தமிழ்நாடு அரசு அவரது இறுதி நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை செய்திருந்தது. நாம் என்ன செய்யப் போகின்றோம்! ஐயாவின் வழியில் தனித் தமிழ்ப் பயன்பாடு, தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு பேணல் என்பனவற்றில் செயற்படுவதே; நாம் அவருக்குச் செய்யக் கூடிய நன்றிக் கடனாகும்.

                                                                              :வி.இ.குகநாதன்

  • Next Postதொல்காப்பியம் போற்றுமின்

Leave a Reply (Cancel reply)

Your email address will not be published. Required fields are marked *

*
*

© 2020 Tamil Museum London all right reserved

fav copy
Copy

  • EN