எம்மைப்பற்றி

எமது பணி


மொழி என்பது மனித‌ சிந்தனைக்கும், உணர்விற்கும், கற்பனைக்கும் இவற்றைச் சார்ந்த‌ செயல்களுக்கும் அடிப்படையானது. அதனடிப்படையில் ஒரு மொழியை ஒரு தொடர்பு சாதன‌மாக மட்டும் கருத முடியாது, அது நடைமுறை வாழ்வின் அடித்தளம், பண்பாட்டின் அடிப்படைக் கூறு, ஒரு நாகரீகத்தின் தோற்றுவாய்.

இதனடிப்படையில் தமிழ் ஒரு மொழிமட்டுல்ல அது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வாழ்வியல், ஒரு உயரிய பண்பாட்டின் அடித்தளம், இவ்வாழ்வியலுக்ச் சான்றாக

அமைவது பழந்தமிழ் சங்க இலக்கியங்களே. மனிதன்  இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்த‌தைப்பற்றியும், பிற உயிர்களுடன் இசைபட வாழ்ந்த‌தைப்பற்றியும், தன் சக மனிதனுடன் கலந்து மகிழ்வுடன் வாழ்ந்த‌தைப்பற்றியும் ‍ “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சங்க இலக்கியங்கள் அழகாகப் பறை சாற்றுகின்றன.

இந்த  அறம் தோய்ந்த பண்பாடுகளும், அழகிய வாழ்வியலும் பல ஆராயப்பட வேண்டிய‌ காரண‌ங்களாலும், நீண்டநெடிய‌ காலப்போக்காலும் மறைக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், மறக்கப்பட்டும் விட்டது. இயற்கையுடன் இசைபட வாழ்வதும், அழிந்துகொண்டிருக்கும் மற்ற உயிரினங்களைக் காப்பதும், பிறரை தன்னைப்போல் நேசிப்பதையும் மீட்டெடுக்கவேண்டியது இக்காலகட்டதில் மிக மிக அவசியமானதொன்று. இவ்வாழ்வியல் மீட்டெடுக்கப்பட‌ வேண்டுமானால், தமிழ் மொழியையும், அதன் தொல்லிலக்கியங்களையும், பண்பாட்டு எச்சங்களையும், வாழ்வியல் கூறுகளையும் மற்றும் நாகரீகத்தின் தொன்மங்களையும் மீளுருவாக்கம்  செய்வதுவும் ஒரு வழியே.

இதை மிளுருவாக்கம் செய்வதும், அவற்றை எமது வருங்காலத் தலைமுறையினருக்குக் கடத்துவதும் எமது கடமை. இது கவனமாகவும், நேர்த்தியாகவும், அறிவியல் பூர்வமாக திட்டமிட்டும் செய்யவேண்டிய ஒரு மாபெரும் செயல்திட்டம். இந்த வாழ்வியலினதும், பண்பாட்டினதும், மரபுகளினதும் அழிவு  ஓரிரண்டு நாட்களில் நடந்ததல்ல, இது பலநூறு தலைமுறைகளாக நடந்தேறிய‌ ஒரு சோகம். எனவே இந்த‌ மீட்டுருவாக்க வேலைத்திட்டம் கூட ஒரு குறுகிய செயல்த்திட்டமன்று, இதுவும் தலைமுறை தலைமுறையாகச் செய்துவரவேண்டிய ஒரு நடவடிக்கையே.

தமிழ் பேசும் மக்கள் உலகளாவிப் பரந்து வாழ்வதால் தமிழ் மொழியின் வளர்ச்சி தமிழ் பேசும் மக்களின் ஒரு பொது தேவை ஆகின்ற‌து. தமிழை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவது எமது கடமை ஆகிறது. இதைவிட ஒரு மொழி அழிந்தால் அந்த மொழிபேசும் இனம் அழியும், அத‌னால் தமிழ் மொழியை அழிய விடாது காப்பதும், அதன் வாழ்வியலை மீட்டெடுப்பதும் எமது தலையாய கடமையாகின்ற‌து.

இந்த மீளுருவாக்கத்திட்டத்தின் ஒரு சிறு வேலைத்திட்டமாக நாங்கள் இலண்டன் மாநகரில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க முனைந்துள்ளோம். இவ்வருங்காட்சியகத்தில் த‌மிழ் மொழி, தமிழிலக்கியங்கள், பண்பாட்டுக்கூறுகள், மரபுகள், பண்டைய வாழ்வியல், நாகரீகங்கள் மற்றும் அரசியல் சம்பந்த‌ப்பட்ட ஆவணங்களையும், சான்றுகளையும், விளக்கங்களையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

Go To Top